இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம், பாசிப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரி, ப்ரீத்தி, நர்மதா ஆகிய மூன்று சிறுமிகளும் குறித்த பிரதேசத்திலுள்ள குளம் ஒன்றுக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
சேறு நிறைந்த ஆழமான பகுதிக்குச் சென்ற மூவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனைக் கண்ட ஏனைய சிறுமிகள் கூச்சலிட்டுள்ளனர்.
உடனே அருகிலிருந்தவர்கள் மூவரையும் மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வைத்தீஸ்வரி மற்றும் ப்ரீத்தி ஆகிய இரண்டு சிறுமிகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
நர்மதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மைக் காலமாக நீர் நிலைகளில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.