Thursday, November 21, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain Newsஉண்மையான நல்லிணக்கம் ஏற்பட அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

உண்மையான நல்லிணக்கம் ஏற்பட அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

“எந்தவொரு அரசுக்கும் கொடுக்காத ஆதரவை வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்குக் கொடுத்துள்ளனர். அதுமாத்திரமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளில் முதன்மைப்படுத்தக்கூடிய ஒன்றாக தேசிய இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டு அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதானது இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் என்று நாங்கள் நம்புகின்றோம்.”

– இவ்வாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்துத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:-

“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வாக்களித்த 65ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் வாக்களிப்பில் கலந்துகொண்ட கலந்துகொள்ளாத ஏனைய மக்களுக்கும் எமது நன்றிகள்.

வரலாற்றில் முதன்முறையாக விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குமேல் கொடுத்து ஓர் இடதுசாரி கட்சியை ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு எமது வாழ்த்துகள். ஆட்சியில் அமர்ந்திருக்கக்கூடிய தேசிய மக்கள் சக்திக்குப் பெருமளவிலான சுமை தலைமேல் சுமத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்க வேண்டும். வெளிநாடுகளில் வாங்கிய கடன்களை அடைக்கத் தொடங்க வேண்டும். உள்நாட்டில் அவர்களை நம்பி வாக்களித்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென பிரத்தியேக பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்த வேண்டும். இவ்வாறு பல பொறுப்புகளும் கடமைகளும் இருக்கின்றன. இதற்கு மேலதிகமாக சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை போன்றவையும் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானவை.

புதிய அரசும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அனைத்து கடமைகளையும் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய அரசு முந்தைய ஆட்சியாளர்கள் வெற்றிக்களிப்பில் திளைத்ததுபோல் அல்லாமல் தனது கடமைகளையும் பொறுப்பையும் உணர்ந்து சரியான திசைவழியில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஓர் அதிகாரப் பகிர்வுக்காகப் போராடி வந்திருக்கின்றனர். அதற்காக நீண்டகாலப் போர் ஒன்றும் இந்த மண்ணில் நடைபெற்றது. எந்தவொரு அரசுக்கும் கொடுக்காத ஆதரவை வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்குக் கொடுத்துள்ளனர்.

அதுமாத்திரமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் வழங்கியுள்ளனர். இந்நிலையில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளில் முதன்மைப்படுத்தக்கூடிய ஒன்றாக தேசிய இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டு அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதானது இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் என்று நாங்கள் நம்புகின்றோம்.” – என்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments