சந்தையில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்க 70ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இந்த அரிசியை இறக்குமதி செய்து உற்சவக்காலத்தில் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரிசி மாஃபியாக்களுக்கு புற்றுப்புள்ளிவைத்து நுகவர்வோருக்கும், விவசாயிகளுக்கும் பயனை பெற்றுக்கொடுக்கும் நீண்டகால தீர்வுகள் அடுத்த பெரும்போகத்துடன் கிடைக்கப்பெறும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அறிவிக்கும் விசேட ஊடகவிலாளர் சந்திப்பு புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
”சந்தையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான மூவர் அடங்கிய அமைச்சரவை கடந்த காலத்தில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.
விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சு, பாவனையாளர் அதிகார சபை உட்பட உரிய தரப்பினருடன் பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு நடத்தப்பட்டு சேகரிக்கப்பட்ட தரவுகளில் பாரிய பிரச்சினைகள் உள்ளன. இவற்றை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவ அவசியமாகும்.
எமது நாட்டில் அரிசி உற்பத்தியானது மேலதிகமாகவே உள்ளது. ஆனால், நுகர்வோர் சந்தைக்குச் சென்றால் அரிசிக்கு தட்டுப்பாடு உள்ளது. அதனால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வொன்று அவசியமென தீர்மானித்தோம்.
விவசாய அமைச்சும், வர்த்தக அமைச்சும் இணைந்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தியது. குறித்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானம் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக 70ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான சதொச வலையமைப்பு மற்றும் எஸ்.டி.சி ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஊடாக இந்த செயல்பாட்டை செய்ய உள்ளோம். எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இந்த அரிசியை சந்தைக்கு விநியோகிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அரிசியை 220 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்யவும் முடியாது. இந்த நிபந்தனையின் கீழ் குறிப்பிட்ட சில இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதன்போது அரிசியின் தரம் குறித்தும் அவதானம் செலுத்தப்படும். கடந்த காலத்தை போல் அல்லாது உரிய முறைமையின் கீழ் இந்த செயல்பாடு இடம்பெறும்.” என்றார்.