யுக்ரேனிலுள்ள தமது தூதரகத்தை மூடியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது..
வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்று இன்று புதன்கிழமை கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து தூதரகத்தை மூடுவதற்குத் தீர்மானித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து மேற்குலக நாடுகள் சிலவும் தமது தூதரகங்களை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளன.
இத்தாலி, ஸ்பெனிஸ், கிரேக்கம் ஆகிய நாடுகளும் தமது தூதரகங்களை மூடியுள்ளதாக அறிவித்துள்ளன.
ரஷ்யாவில் ஏவுகனைத் தாக்குதலை நடத்துவதற்கு யுக்ரேனுக்கு அனுசரணை வழங்கும் நேட்டோ நாடுகள் தண்டிக்கப்படும் என்று ரஷ்யாவின் வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யாவின் பல நகரங்கள் மீது யுக்ரேன் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளபோதிலும், 50 ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கியழித்தாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் கிவ் நகரில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இந்த அறிவிப்பை புறக்கணித்துவிட வேண்டாம் என்று யுக்ரேன் தனது நாட்டுப் பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரிய துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதை நேட்டோ தற்போது உறுதிசெய்துள்ளது.
வட கொரிய இராணுவத்தின் மூன்று ஜெனரல்கள் உள்ளிட்ட சிரேஸ்ட படை அதிகாரிகள் ரஷ்யா சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவிலிருந்து சுமார் பத்தாயிரம் துருப்புகள் ரஷ்யா சென்றிருப்பதாகச் சில மாதங்களுக்கு முன்னர் வதந்தி நிலவியது. எனினும், அது தற்போது உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யுக்ரேன் மீது மாதக் கணக்கில் தாக்குதலை நடத்தும் அளவுக்கு ஏவுகணைகள் ரஷ்யாவின் கையிருப்பில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.