பாஜகவிற்கு ஆதரவளித்ததால் பெண் கொல்லப்பட்டுள்ளார் என அவரது தந்தை குற்றச்சாட்டியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பாராளுமன்ற தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து அவர் எம்.எல்.ஏவாக இருந்த கர்ஹல் சட்டமன்ற தொகுதிக்கு இன்று(20.11.2024) இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை கர்ஹல் தொகுதியில் உள்ள வயல்வெளியில் சாக்கு மூட்டையில் பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது.
சடலமாக கிடந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரில் பாஜகவிற்கு வாக்களிப்பேன் என என்னுடைய மகள் கூறியதால் கொலை செய்து விட்டனர் என தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பிரசாந்த் யாதவ் மற்றும் மோகன் கத்தேரியா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
“3 நாட்களுக்கு முன்பு பிரசாந்த் யாதவ் வீட்டிற்கு வந்து ‘எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்’ என்று கேட்டார். அதற்கு, ‘பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனது குடும்பத்திற்கு வீடு கிடைத்ததால், பாஜகவின் சின்னமான தாமரைக்கு வாக்களிப்பேன்’ என என்னுடைய மகள் பதிலளித்தார். பின்னர் பிரசாந்த் யாதவ் , ‘சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்’ என மிரட்டினார்” என பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாஜக சமாஜ்வாதியை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எங்கள் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது என சமாஜ்வாதி இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.