சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட உள்ளது.
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு மூன்றாம் கட்டமாக வழங்கப்பட்ட கடன் தொடர்பான மதிப்பாய்வை அடிப்படையாக கொண்டே பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் நான்காம் கட்டமாக இலங்கைக்கு 330 மில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியம் கடனாக வழங்க உள்ளது.
இதற்கான இவ்வாண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி மூன்றாம் கட்டமாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 336 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடர்பான மதிப்பாய்வுகளை மேற்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவொன்று கடந்த 17ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்தது.
இந்தக் குழு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.
இந்த கலந்துரையாடலின் எட்டப்பட்ட உடன்பாடுகளின் பிரகாரமே பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.
இதுதொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையில் கூறியதாவது,
”சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துடன் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (இன்று) கைச்சாத்திடப்படும்.
இரு தரப்பு கடன் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரதான கடன் வழங்குநர் நாடுகளுடன் பிரத்தியேக ஒப்பந்தம் வெகுவிரைவில் கைச்சாத்திடப்படும். நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.” என்றார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் 2.9 பில்லியன் டொலரை கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் கோரியது. அதன் பிரகாரம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
2023ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் திகதி முதல்கட்டமாக 333 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கடனாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப்பெற்றது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி இரண்டாம் கட்ட கடனாக 337 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக கிடைக்கப்பெற்றது. இவ்வாண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி மூன்றாம் கட்டமாக இலங்கைக்கு 336 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.