விகிதாசார தேர்தல் முறையின் ஊடாக சிறுபான்மை மக்களினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்படுவதால் இத்தேர்தல் முறையை தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்பதுடன், தேவையான சில மாற்றங்களை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட அசோக ரன்வலவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது 12 சதவீத வாக்குகளை பெற்றாலே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற முடியும் என்ற நிலைமை காணப்பட்டது. இதனால் சிறுபான்மை மக்கள் மற்றும் சிறிய கட்சிகளால் பிரதிநிதித்துவங்களை பெற முடியாத நிலைமை காணப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்து இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டார். அதன் பிரகாரம் 5 சதவீத வாக்குகளை பெற்றுக்கொள்ளும் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றது.
இந்த மாற்றத்தால்தான் 1994ஆம் ஆண்டு சிறிய கட்சியாக இருந்த ஜே.வி.பியிலிருந்து ஒருவர் நாடாளுமன்றத்தக்கு தெரிவானார். அம்பாந்தோட்டையிலிருந்து அன்று நிஹால் கலபத்தி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி வந்தபோது நானும் முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தேன்.
அதனால் விகிதாசார தேர்தல் முறையை தொடர்ந்து கொண்டு செல்வதன் ஊடாக ஏனைய சிறுபான்மை இனங்கள் மற்றும் கட்சிகளுக்கு உறுப்புரிமை கிடைக்கும் என எதிர்பாக்கிறோம். ஆனால், தேர்தல் முறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்றார்.