தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளுக்கும், நிகழ்ச்சி நிரலுக்கும் ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தியும் இடமளிக்க கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இனவாதம், மதவாதத்துக்கு எதிரானதே இந்த மக்கள் ஆணை என ஜனாதிபதி கூறியுள்ளதுடன், வடக்கு, கிழக்கு தெற்கு என அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பும் அதுதான் என்றும் கூறியுள்ளார். ஜனாதிபதி பிரிவினைவாதத்துக்கு எதிராக செயல்பட வேண்டும். அதனையே இந்த மக்கள் ஆணை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழீழத்தை கோரி பிரிவினைவாதம் பேசிய சுமந்திரனை மக்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். மதவாதம் பேசிய ஹக்கீம்கூட மயிலிழையில் தான் வெற்றிபெற்றார்.
தற்போது புலம்பெயர் தமிழர்கள் தமது பிரிவினைவாதக் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள இந்த மக்கள் ஆணையை ஏணியாக பயன்படுத்திக்கொள்ள பார்க்கின்றனர். கனேடிய தமிழ் காங்கிரஸ் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றமைக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
வாழ்த்துகளை தெரிவித்துள்ளதோடு உடனடியாக தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறும் கனேடிய தமிழ் காங்கிரஸ் கோரியுள்ளது. 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள், மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள், பிரிவினைவாதம் கொண்ட புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவாருங்கள், வடக்கு, கிழக்கில் உள்ள பெளத்த விவகாரைகளை பாதுகாப்பதையும், அபிவிருத்தி செய்வதையும் நிறுத்துங்கள் என இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மக்கள் ஆணையை சரியாக உணர்ந்துக்கொள்ள வேண்டும். இந்த ஆணையானது இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் எதிரானது போன்று பிரிவினைவாதத்துக்கும் எதிரானது என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும். அதனைதான் வடக்கு மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் ஏனைய மாவட்ட மக்களுக்கும் இதனைத்தான் கூறியுள்ளனர். தமிழ் பிரிவினைவாதிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமும் ஜனாதிபதியும் செயல்படக் கூடாது. பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலை கொண்டுசெல்ல முற்பட்டால் அதற்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்றிணைந்து நாம் கடுமையாக எதிர்ப்போம்.” என்றார்.