அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
குருணாகல் ஹெட்டிபொல பகுதியில், அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாகத் தொடர்ந்தும் 81 நலன்புரி நிலையங்களில் 8,377 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
சீரற்ற காலநிலை காரணமாக 470,094 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
இதன்படி, அந்த மாவட்டத்தில் மாத்திரம் 162,092 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மதுரங்குளி – கஜூவத்த பகுதியிலுள்ள இடமொன்றில் தடைப்பட்டிருந்த வடிகான்களை சுத்தப்படுத்தும் போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இடமொன்றின் உரிமையாளர் மற்றும் பிரதேச மக்களுக்கு இடையே அமைதியின்மை ஏற்பட்டது.
நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல்துறையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, பிரதேச மக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர், முந்தல் காவல்துறையின் மேலும் சில அதிகாரிகள் பிரவேசித்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.