‘வார் 2’ கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க ஹாலிவுட் பட ஸ்டண்ட் இயக்குனர்கள் இப்படக்குழுவுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆக்சன் திரில்லர் படம் ‘வார்’. டைகர் ஷ்ராப் மற்றும் வாணி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இந்தப்படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் கீழ் ஆதித்யா சோப்ராவால் தயாரிக்கப்பட்டது.
தற்போது ‘வார் 2’ படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மீண்டும் மேஜர் கபீர் தலிவாலாக நடிக்கிறார். இந்த படத்தை ‘பிரம்மாஸ்திரா’ பட இயக்குனர் அயன் முகர்ஜி இயக்குகிறார். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க ஹாலிவுட் பட ஸ்டண்ட் இயக்குனர்கள் இப்படக்குழுவுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ‘வெனம்’ பட ஸ்டண்ட் இயக்குனர் சிப்ரோ ரசாடோஸ், அவெஞ்சர்ஸ்:
ஏஜ் ஆப் அல்ட்ரானில் ஸ்டண்ட் மூலம் அனைவரையும் திகைக்கச் செய்த சே-யோங் ஓ ஆகியோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இந்த மாத மத்தியில் மும்பையில் தொடங்கி 15 நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிகிறது. வார் 2 அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.