ஒரு கட்டத்திற்கு மேல் பிள்ளைகளை படிக்க வைத்ததை தாண்டி பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய சுமையாக திருமணம் இருந்து வருகிறது. போன தலைமுறை வரை ஒரு பெண்ணுக்கு அல்லது ஒரு ஆணுக்கு திருமணம் செய்வது என்பது எளிமையான விஷயமாக இருந்தது.
ஆனால் இப்பொழுது பெண் வீட்டார் பக்கமும் மாப்பிள்ளை வீட்டார் பக்கமும் அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கும் காரணத்தினால் மணமகன் அல்லது மணமகள் கிடைப்பது என்பது ஒரு கஷ்டமான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
இதனாலேயே வயது அதிகமடைந்த பிறகும் கூட பலரும் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை இருக்கிறது. இந்த நிலையில் இந்த திருமண தடைகளை போக்கக்கூடிய சில ஸ்தலங்கள் தமிழகத்தில் உண்டு அவற்றை இப்பொழுது பார்க்கலாம்
தனது பெயரிலேயே திருமணம் என்கிற வார்த்தையை கொண்டிருக்கும் திருமணஞ்சேரி தமிழ்நாட்டிலேயே திருமணத்திற்கான பிரசித்தி பெற்ற ஒரு கோயிலாக பார்க்கப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் திருமண தடைகளை நீக்குவதற்கு என்று பிரத்தியேகமாக உள்ள ஒரு கோவிலாக பார்க்கப்படுகிறது.
அதற்கு முக்கிய காரணம் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தது இந்த திருமணஞ்சேரியில் தான். அவர்கள் இருவரும் ஜோடியாக காட்சி தந்து பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கிய தளமிது. இதனாலேயே திருமண தடைகளை நீக்கும் சக்தியை இயற்கையாகவே இந்த திருத்தலம் கொண்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில்:
திருப்பரங்குன்றம் கோயிலானது முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமான ஒரு கோவிலாகும். பல சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட ஒரு திருஸ்தலமாக இந்த கோவில் இருந்து வருகிறது. முருகப்பெருமான் தன்னுடைய மனைவியான தெய்வானையை திருமணம் செய்த இடம் தான் திருப்பரங்குன்றம்.
அதனாலேயே திருமண தடையை விளக்கும் சக்தி பெற்ற ஒரு ஸ்தலமாக இது இருந்து வருகிறது.
பழனி கோவில்:
பழனி முருகன் கோவில் திருமண பரிகாரங்களுக்கு பிரபலமான ஒரு கோவிலாக இருந்து வருகிறது ஆண்டி ரூபத்தில் இருக்கும் முருகன் பல குறைகளை தீர்த்து வைக்கிறார் என்கின்றனர் பக்தர்கள். பழனி கோவில் முக்கியமாக செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகக்காரர்களுக்கான முக்கிய ஸ்தலமாக இருக்கிறது.
பழனி முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து விளக்கேற்றுவதன் மூலம் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.