யாழ்ப்பாணம் மாவட்டம் – தென்மராட்சிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகளினால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தொண்டமானாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவிலிருந்து பாதுகாக்குமாறு கோரி, குறித்த பகுதி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டமானாறு தடுப்பணை மூடி வைக்கப்பட்டுள்ளதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், இதன் காரணமாகப் பயிர்கள் அழிவடைவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரம் போதுமானதாக இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவின் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் 45,000 ரூபா நிவாரணத்தில் 6 மாதங்கள் வாழ்க்கை நடத்துவது கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், உர மானியம், பல்வேறு காரணங்களினால் அழிவடைந்த பயிர்ச்செய்கை தொடர்பிலும் அரசாங்கம் உரிய அவதானம் செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.