டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனம் நாகொடை மற்றும் வெலிசறையில் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்திற்கும் இன்று(5) சீல் வைக்கப்பட்டது.
மெண்டிஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய மதுவரி மற்றும் அதற்கான 3 வீத கூடுதல் கட்டணம் உள்ளிட்ட 5.7 பில்லியன் ரூபாயை செலுத்த தவறியதன் காரணமாக மதுவரி கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளின்படி, இன்று (5) முதல் அதன் மதுபான உற்பத்தி உரிமத்தை இடைநிறுத்துமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின்படி மதுவரி திணைக்களம் மற்றும் கம்பஹாவின் மதுவரி அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அந்நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளனர்.
ஆறு மணி நேரத்துக்கும் மேலான கண்காணிப்புக்குப் பிறகே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் டபிள்யூ. எம். மெண்டிஸ் கம்பனியின் அனைத்து உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என ஜா-எல மற்றும் கம்பஹா மதுவரி அத்தியட்சகர்கள் தெரிவித்தனர்.
வரி செலுத்த தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை கடந்த நவம்பர் 30ஆம் திகதி முதல் ரத்து செய்ய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இத்தகைய பின்னணியில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்பதாக, மதுவரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணையின்றி நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (4) உத்தரவிட்டிருந்தது.