ஆபிரிக்காவில் மர்மக் காய்ச்சலால் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அறியப்படாத நோய் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நோய்க்காரணமாக கடந்த நவம்பர் 10 முதல் கொங்கோவில் இதுவரை 300 பேரை பாதிப்படைந்துள்ளனர். இந்த மர்ம நோய் காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசப் பிரச்சினை மற்றும் இரத்த சோகை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடையாளம் காணப்படாத காய்ச்சல் போன்ற நோய் தென்மேற்கு கொங்கோவில் உள்ள குவாங்கோ மாகாணத்தில் கண்டறியப்பட்டது. நோயின் தன்மை குறித்து கண்டறிய குவாங்கோ மாகாணத்திற்கு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மர்ம காய்ச்சல் தொடர்பாக மக்கள் அமைதியாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.