இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இன்று (டிசம்பர் 5) வெளியான திரைப்படம் புஷ்பா 2 தி ரூல். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வெளியீட்டுக்கு முந்தைய முன்பதிவில் மட்டும் ரூ. 100 கோடியை கடந்த புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. திரைப்படம் வெளியான நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண் ரேவதி என்பதும் அவருக்கு வயது 39 என்று கூறப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமுற்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஐராபாத்தில் சிக்கடப்பள்ளியில் சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு பிரீமியர் காட்சி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு வந்த அல்லு அர்ஜுனைக் காண கூட்டத்தில் ரசிகர்கள் முண்டியடித்த போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்ய ஐதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவத்தில் திரையரங்கு மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.