அரிசி ஆலை உரிமையாளர்களால் நியாயமான விலையில் மொத்த விற்பனையாளர்களுக்கு அரிசி வழங்கப்படாமையினால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி அதற்கான இணக்கப்பாடொன்றையே கோரியிருந்தார்.
எனினும், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்குப் புறம்பாக, நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அரிசி விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாப்பதற்காகவே வெளியிடப்பட்டுள்ளதாகத் தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அரிசிக்குக் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரிசி இறக்குமதி அனுமதி வழங்கப்பட்டுள்ள பின்னணியில் நேற்றும் பல பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையில் அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவியதாக நுகர்வோர் தெரிவித்தனர்.