2024-ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தாண்டு பொதுமக்களால் அதிகம் விரும்பப்பட்டு கூகுளில் தேடப்பட்டவை குறித்த பட்டியலில் 10 இடங்கள் குறித்து வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டு இந்திய அளவில் கூகுளில் முணுமுணுத்து தேடப்பட்ட (Hum to Search) பாடல்களின் பட்டியலின் முதல் 10 இடங்களில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ‘கட்சி சேர’ பாடல் 4-ம் இடத்திலும், ‘ஆச கூட’ பாடல் 9-ம் இடத்திலும் இடம்பெற்று உள்ளது.
உலக அளவில் கூகுளில் முணுமுணுத்து தேடப்பட்ட பாடல்களின் பட்டியலில் ‘கட்சி சேர’ பாடல் 10-ம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ள 20 வயதான சாய் அபயங்கர் கட்சி சேர மற்றும் ஆசை கூட என இரண்டு ஆல்பம் பாடல்களை பாடி இணையத்தில் வெளியிட்டார். இந்த பாடல்கள் இணையதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 45-ல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்துள்ளார்.
முன்னதாக, ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய் அபயங்கர் தமிழ் திரையுலகில் முன்னணி பாடகர்களான பாடகர் திப்பு மற்றும் பாடகி ஹரிணி தம்பதியின் மகன் ஆவார்.