பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரின் மகன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பிரபல தொலைக்காட்சி நடிகையான சப்னா சிங்கின் மகனான சாகர் (Sagar Gangwar 14), ஞாயிற்றுக்கிழமை காலை, உத்தரப்பிரதேசத்திலுள்ள Bareilly நகரில், சந்தேகத்துக்குரிய முறையில் சடலமாக மீட்கப்பட்டான்.
தனது மகனுடைய மரணத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கோரி, சப்னா நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
90 நிமிட போராட்டத்துக்குப் பின், சப்னாவை சந்தித்த பொலிசார், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார் சப்னா.
இந்நிலையில், இன்று சாகரின் நண்பர்களான அனுஜ் மற்றும் சன்னி என்னும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
CCTV கமெரா காட்சிகளில் அவர்கள் இருவரும் சாகரின் உடலை இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது தெரியவந்தது.
விசாரணையில், தாங்கள் மூன்றுபேரும் சேர்ந்து மதுபானம் மற்றும் போதைபொருட்கள் உட்கொண்டதாகவும், 14 வயதான சாகர் அளவுக்கதிகமாக மதுபானம் மற்றும் போதைபொருட்கள் உட்கொண்டதால் நிலைகுலைந்து சரிந்ததாகவும், பயந்துபோன அனுஜும் சன்னியும் சாகரின் உடலை இழுத்துச் சென்று ஒரு வயலில் போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.