இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு போட்டிகளில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 298 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சதர்லேண்ட் சதம் அடித்து அசத்தினார்.
அவர் 110 ரன்னில் அவுட் ஆனார்.
இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கடினமான இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா – ரிச்சா கோஷ் களமிறங்கினர்.
ரிச்சா கோஷ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து மந்தனாவுடன் ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது.
தியோல் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஹர்மன்பிரீத் கவுர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மந்தனா சதம் (105) அடித்து அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியில் இந்தியா 45.1 ஓவரில் 215 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
அவுஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்துள்ளது.