உலக சதுரங்க சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ், நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இதன் மூலம் 18 வயதிலேயே உலக சதுரங்க சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது.
14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேஷும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர்.
மற்றைய அனைத்து ஆட்டங்களும் சமநிலையில் முடிந்தன.
ஆனால் நேற்று நடைபெற்ற 14ஆவது சுற்றில் அற்புதமாக விளையாடிய குகேஷ் 58ஆவது நகர்த்தலில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தினார்.
இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு உலக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லும் இராண்டவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்றுள்ள குகேஷுக்கு இந்திய மதிப்பில் 20.8 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.