கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தால், அமெரிக்காவுக்கு கனடா வழங்கும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என கனடா பிரீமியர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கையெழுத்திடும் முதல் ஆவணங்களில் ஒன்று, கனடா, மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பது தொடர்பானதுதான் என்று கூறியிருக்கிறார்.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படுமானால், அது கனடாவின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும்.
இந்நிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தால், அமெரிக்காவுக்கு கனடா வழங்கும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford எச்சரித்துள்ளார்.
2023ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 1.5 மில்லியன் வீடுகளுக்கு கனடா மின்சாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், மிச்சிகன், மின்னசோட்டா மற்றும் நியூயார்க்குக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடு கனடா ஆகும்.
மேலும், சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பதற்காக வாஷிங்டன் டிசிக்கு சென்றிருந்த ஒன்ராறியோ பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சரான Vic Fedeli, அமெரிக்கா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 60 சதவிகிதம் கனடாவிலிருந்துதான் வருகிறது.
ஆக, நீங்கள் இறக்குமதி செய்யும் 60 சதவிகித எண்ணெய்க்கும் 25 சதவிகித வரி விதித்தால், உங்கள் பெட்ரோல் விலை எங்கேயோ போய்விடும் என்று கூறியுள்ளார்.
ஆக, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவிகித வரி விதிக்குமானால், அதை எதிர்கொள்ள கனடா தயாராகிவருவதாகவே தெரிகிறது.