இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் 11ஆம் வகுப்பு மாணவன், செல்போனை தன்னிடம் பறிமுதல் செய்த ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தின் மிஹின்பூர்வாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேந்திர பிரசாத்.
பாடசாலைக்கு செல்போன் கொண்டுவருவதற்கு தடை உள்ளதால், மாணவர்கள் சிலர் செல்போனை பயன்படுத்தியதை ராஜேந்திர பிரசாத் கண்டித்துள்ளார்.
அத்துடன் அவர்களிடம் இருந்து செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த ஒரு மாணவர் நேற்றைய தினம், வகுப்பிற்கு ஆசிரியர் ராஜேந்திர பிரசாத் வந்தபோது அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆசிரியரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் கத்தியால் குத்திய மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.