பருவ மழைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் பலரும் சளி, இருமல் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். அதற்கு மாறாக மழையை ரசிப்பதும், மழை சாரலில் உலவுவதும் சிலருக்கு பிடிக்கும்.
குளிர்ந்த நீரில் குளியல் போடுவது பலருக்கும் ஆனந்த அனுபவமாக அமையும். ஐஸ்கட்டி போல் ஜில்லென குளிர்ந்திருக்கும் நீரில் குளியல் போடுவது கூட ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதுதான். ‘குளிர் நீர் தெரபி’ எனப்படும் இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
தசை வலியை போக்கும்
உடற்பயிற்சியின்போதோ, கடுமையான உடல் உழைப்பின்போதோ ஏற்படும் தசை வலியை போக்க குளிர்ந்த நீர் சிகிச்சை உதவும். ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த நாளங்களின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் பணியை எளிதாக்கும்.
மேலும் குளிர்ந்த நீர் சிகிச்சை உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைப்பதன் மூலம் தசைகளுக்கு புத்துயிர் அளிக்கும். லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றும். கடுமையான உடல் செயல்பாடுகளுக்கு பிறகு ஏற்படும் தசை வலியையும் குறைக்கும்.
தூக்கத்திற்கு உதவிடும்
குளிர்ந்த நீர் சிகிச்சை நன்றாக தூங்கவும் உதவிடும். உடல் வெப்பநிலை குளிர்ச்சி சூழலில் இருப்பது தூக்கத்திற்கு உகந்தது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தூங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் குளியல் போடுவது ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
குளிர்ந்த நீர் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதனால் சட்டென்று நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பும் குறையும்.
”குளிர் நீர் சிகிச்சை மேற்கொண்டவர்கள் வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதாக” நெதர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மனநிலையை மேம்படுத்தும்
ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டு மன ரீதியாக பலவீனமாக இருந்தாலோ, மன வேதனைக்கு ஆளானாலோ மன நிலையை மேம்படுத்துவதற்கு குளிர்ந்த நீர் குளியல் துணை புரியும்.
அப்படி உடலில் குளிர் வெப்பநிலை வெளிப்படுவது நோராட்ரெனலின் உற்பத்தியை அதிகரிக்கும். இது மூளையை தூண்டி கவனமுடன் செயல்படுவதற்கு ஊக்கமளிக்கும். மன நிலையை செம்மைப்படுத்தவும் வழிவகுக்கும்.
மனச்சோர்வை போக்கும்
நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவது பலனளிக்கும். இந்த குளிர் நீர் குளியல் மூளையில் இருந்து நரம்பு மண்டலம் வழியாக பயணிக்கும் நரம்புகளை தூண்டி அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவிடும். உடலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி சோர்வை விரட்டிவிடும்.
அதிலும் மனதளவில் மந்தமாகவும், சோர்வாகவும் உணர்ந்தால் குளிர்ந்த நீர் சிகிச்சை சிறந்த தீர்வாக அமையும். மனத்தெளிவை உண்டாக்கும். கவனிக்கும் திறனையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் வலுப்படுத்தும்.