வங்கக்கடலில் உருவாகி தமிழக பகுதிகளை கடந்து சென்ற தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழையை கொடுத்தது.
தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுப்பகுதியாக வலு இழந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவி வந்தது.
நேற்று லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவி வந்த நிலையில், இது இன்று (14-12-2024) மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக மேலும் வலு குறைந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று நாளை உருவாகும் என்றும், அதன் காரணமாக தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும் அதனைத் தொடர்ந்து நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக 16-ந் தேதி (நாளை மறுநாள்), 17 மற்றும் 18-ந் தேதிகளில் டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இதன்படி 16-ந் தேதி கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து 17, 18-ந் தேதிகளில் தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதில் 17-ந் தேதி மட்டும் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
18-ந் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.