சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய குழு அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ, ஹோம்ஸ், ஹமா, டமாஸ்கஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை கைப்பற்றியது.
இதையடுத்து அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடினார். அவர் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் சிரியா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் விமானப்படை சிரியா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது.
லதாகியா மற்றும் டார்டஸ் துறைமுகங்கள் மற்றும் ஏவுகணைக் கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலிய தரைப்படைகள் சிரியாவுக்குள் நுழைந்து ஆக்கிரமிப்புகளை விரிவுப்படுத்தி வருகிறது.
இதனிடையே துருக்கிய ஆதரவுப் படைகளுக்கும் குர்திஷ் படைகளுக்கும் இடையிலான சண்டையில் 100,000க்கும் அதிகமான மக்கள் வடகிழக்கு சிரியாவில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் டமாஸ்கஸில் உள்ள அல் முஜ்தாஹித் மருத்துவமனையின் பிணவறைக்கு பல்லாயிரக்கணக்கான கைதிகளின் உடல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.
பல கைதிகளின் உடலில் தற்போது, சித்திரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளுடன் அவர்களின் உடலை குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
சிரிய ஆட்சியின் கடைசி மணிநேரங்களில், அது வீழ்ச்சியடைவதற்கு சற்று முன்பு கைதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கொல்லப்பட்டதாக கூறப்படும் ஏராளமான கைதிகளின் உடல்களுடன் பல அறைகள் உள்ளன.
பல உடல்கள் ஒன்றோடொன்று வரிசையாக நிற்கின்றன.
பட்டினிப்போடப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு பலர் கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிலரது உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதால் குடும்பத்தினர் உடல்களை அடையாளம் காண முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவர்களிடம் அடையாளங்கள், அடையாள அட்டைகள் அல்லது அவர்களைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.
அழுகிய உடல்கள் மட்டுமே உள்ளதால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிரியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 200,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.