நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
ஹேமில்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 347 ரன்களை குவித்தது.
அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 453 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் வில் யங் 60 ரன்களையும், கேன் வில்லியம்சன் 156 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் முறையே 44 மற்றும் 60 ரன்களையும் அடித்தனர்.
அடுத்து வந்த டாம் பிலன்டல் 44 ரன்கள், மிட்செல் சான்ட்னர் 49 ரன்களை அடித்தனர்.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி வெற்றி பெற நியூசிலாந்து 658 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் ஜேக்கப் பெத்தெல் 76 ரன்கள், ஜோ ரூட் 54 ரன்கள் மற்றும் கஸ் அட்கின்சன் 43 ரன்களை அடித்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் சான்ட்னர் நான்கு விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி மற்றும் டிம் சௌதி தலா இரண்டு விக்கெட்டுகளையும், வில் ரூர்க்கி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
எனினும், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.