பல அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி மற்றும் தேங்காய் போன்றவற்றுக்கான விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கான தீர்வாக அரிசியை இறக்குமதி செய்யத் தனியார் பிரிவினருக்கு அரசாங்கம் அனுமதியளித்தது.
இதன்படி அந்த காலப்பகுதியில் 4,800 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரிசியை இறக்குமதி செய்யத் தனியார் பிரிவினருக்கு இன்னும் நான்கு நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன.
இதேவேளை, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முதற் தொகுதி அரிசி நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது.
இதன்படி, முதற்கட்டமாக 5,200 மெற்றிக் டன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது.
இதேவேளை, கடந்த வாரங்களில் பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் ஆலை உரிமையாளர்களினால் 82,11,000 கிலோ அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதில் ஐம்பது சதவீதமானவை நாடு அரிசி என அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் பாரிய, நடுத்தர மற்றும் சிறு நெல் ஆலைகளில் தங்கியுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளது கண்காணிப்பின் கீழ் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரிசியைப் பரிசோதிக்கும் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி, பொலன்னறுவை மாவட்டத்தின் பிரதான நெல் ஆலைகள் மற்றும் ஏனைய நெல் ஆலைகளினால் கடந்த வாரங்களில் 410,50,000 கிலோ நாடு அரசி விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனியார் இறக்குமதியாளர்களினால் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட பாவனைக்கு உதவாத அரிசியை மீள் ஏற்றுமதி செய்யும் வரை அவற்றை தமது பொறுப்பில் வைத்துள்ளதாகச் சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாவனைக்கு உதவாத 75,000 கிலோ கிராம் அரிசியே தமது பொறுப்பில் உள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.