அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.
யசந்த கோதாகொட, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அர்ஜூன ஒபேசேகர உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்றைய தினம் இடம்பெற்றன.
இதன்போது மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முன்கூட்டியே வெளியானதாகக் கூறப்படும் 3 வினாக்களுக்கான புள்ளிகளை இலவசமாக வழங்கத் தீர்மானித்துள்ள நிபுணர் குழு, அதனுடன் தொடர்புபட்ட முழு விடயங்களையும் கருத்திற் கொள்ளாது அறிக்கை தயாரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக இந்த பரீட்சையில் ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் அதனால் முழு மாணவ சமூகமும் பாதிப்புக்குள்ளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த வினாத்தாள் தொடர்பான பரீட்சை நடத்தப்பட வேண்டும் என மனுதாரர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.
இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்ன, நீதிமன்ற அறிவிப்புக்கமைய நிபுணர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்டார்.
அந்த பரிந்துரைகளுக்கு அமைய, வெளியானதாகக் கூறப்படும் 3 வினாக்களுக்கான இலவச புள்ளிகளை வழங்க தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனுவை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம் விசாரணைகளை இன்றைய தினம் வரை ஒத்தி வைத்துள்ளது.