நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு அவர் ஓய்வு பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹேமில்டனில் டிம் சவுதி விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி வீரர்கள் அவருக்கு மரியாதை வழங்கினர்.
17 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும் டிம் சவுதி இதுவரை 391 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
நியூசிலாந்து அணியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஹாட்லிக்கு அடுத்த இடத்தில் டிம் சவுதி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேப்பியரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டிம் சவுதி தனது 19 வயதில் அறிமுகமானார்.
அந்தப் போட்டியில் அவர் 55 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்த டிம் சவுதி 40 பந்துகளில் 9 சிக்சர்களை விளாசி 77 ரன்களை குவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் டிம் சவுதி இதுவரை 98 சிக்சர்களை அடித்திருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார்.
மேலும், 85 கேட்ச்களை பிடித்துள்ளார்.
ஓய்வு குறித்து பேசிய டிம் சவுதி, “100 சிக்சர்கள், 400 டெஸ்ட் விக்கெட்டுகள், 100 கேட்ச்கள், இவற்றை எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எனினும், என்னால் என்னென்ன செய்ய முடிந்ததோ அதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
அணியில் இருந்த ஒவ்வொரு சமயமும் எனக்கு மிகவும் விசேஷமான ஒன்று,” என்று கூறினார்.