ஆபிரிக்க வைரஸ் தொற்றுக்குள்ளான பன்றிகளைக் கொலை செய்து, அதன் இறைச்சியை எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் விற்பனை செய்வதற்காக குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
பன்றிகளை ஏற்றிச்செல்வதற்கு கடந்த காலங்களில் சட்டவிரோத முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அரசாங்கத்தின் அனுமதியின்றி முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஒருவரின் கடிதத்தின் அடிப்படையில் இந்தப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாகவும் விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த நடைமுறையை முழுமையாக இரத்துச்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாய அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே உள்நாட்டிலுள்ள பன்றிகளுக்கு ஆபிரிக்க வைரஸ் பரவியதன் காரணமாக பன்றி இறைச்சியை உற்பத்தி செய்வதற்கான தொழிற்றுறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையைத் தவிர நாட்டின் ஏனைய சகல பிரதேசங்களிலும் இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும் அதற்கமைய, பண்டிகைக் காலங்களில் பன்றி இறைச்சி தொடர்பான பிரச்சினை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட் டினார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் பன்றி இறைச்சி உற்பத்தி தொழிற்றுறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்றை ஒழிப்பது தொடர்பில் கால்நடை வைத்திய பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்திட்டத்தை மேலும் துரிதப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று, கால்நடை மருத்துவ கண்காணிப்பு சிறப்பாக உள்ள பிரதேசங்களில் இந்த வைரஸ் பரவும் வீதம் குறைவாகவே காணப்படுகிறது.
வைரஸ் தொற்றுக்குள்ளான பன்றிகளின் இறைச்சி குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகளில் சேமிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படும். அவ்வாறு குளிரூட்டப்பட்டுக் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பன்றி இறைச்சியை உடனடியாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வைரஸ் தொற்று காரணமாக பன்றிகள் உயிரிழந்தமையின் காரணமாக சிரமப்படும் துறைசார்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.