2017-ம் ஆண்டு வெளியான ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் ‘மகாராஜா’ படத்தை இயக்கி உள்ளார்.
கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
தி ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கதாநாயகனாக நடித்துள்ளார்.
அனுராக் காஷ்யப், சச்சனா நமிதாஸ், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்பிரமணியம், அபிராமி, அருள்தாஸ், முனீஷ்காந்த், மணிகண்டன், சிங்கம்புலி, பாரதிராஜா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த இப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவையும் பிலோமின் ராஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையை கொண்டு தொடங்கும் இப்படம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு தந்தையாக விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்பதே நிதர்சனம். விஜய் சேதுபதிக்கு இது 50-வது படமாகும்.
இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவை பாராட்டினர்.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.
மேலும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி வெற்றி நடைபோட்டது.
இதை தொடர்ந்து, ‘மகாராஜா’ திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டது.
40,000 திரைகளில் வெளியான இப்படம் சீன ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘2.O’ படம் சீனாவில் வெளியாகி ரூ.22 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது.
ஆனால் ‘மகாராஜா’ ஒரு வாரத்திலேயே அந்த சாதனையை முறியடித்தது. மேலும் ஜப்பான் மொழியிலும் டப்பிங் செய்யப்பட உள்ளது.