முதுமையில் மூளையைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது – ‘பார்கின்சன்’ என்கிற ‘மூளை நடுக்குவாதம்’.
பார்கின்சன் நோய், பார்கின்சன் சிண்ட்ரோம், பார்கின்சன் பிளஸ் சிண்ட்ரோம், பார்கின்சோனிசம் என்று உதறு வாதத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன.
நோயாளிகளும், சில நேரங்களில் மருத்துவர்களும் கூட இதனை தனித்தனியாக பார்க்காமல் ஒரே நோயாக கருதுகின்றனர்.
இதில் பார்கின்சன் நோய் என்பது மூளையில் டோபமைன் என்ற ரசாயனத்தின் குறைவால் ஏற்படுகிறது.
இது மருந்துகளின் மூலம் குணப்படுத்தக்கூடிய நோய்.
ஆனால், ரத்த குழாய் பிரச்சினைகளாலோ, சில மருந்துகளை உட்கொள்வதாலோ, நரம்பியல் பிரச்சினைகளாலோ பிற நடுக்குவாதங்கள் ஏற்படலாம்.
இவற்றை, எளிதில் குணப்படுத்த முடியாது. இந்த நோய்க்கான காரணங்களை கண்டுபிடித்து அதற்குரிய மருந்துகள் தரப்பட வேண்டும்
உலக அளவில் 70 வயதைக் கடந்தவர்களில் லட்சத்துக்கு 1,700 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் புதிதாக இதனால் பாதிக்கப்படுகிறார் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதிலும் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் ஒன்றரை மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
நம் நடுமூளையில் சற்றே அடர்ந்த கறுப்பு நிறத்தில் இருக்கும் Substantia nigra (SN) என்கிற பகுதியில் உள்ள மூளை நியூரான்கள் தேவையான அளவு சுரக்க வேண்டிய ‘டோபமைன்’ (Dopamine) என்கிற வேதியியல் சுரப்பு, முறையாகச் சுரக்காததால் சீரமைக்கவே முடியாத அளவுக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படுவதே நடுக்குவாதம்.
நடுக்குவாத அறிகுறிகள்
* அடிக்கடி கீழே விழுதல், நடையில் தடுமாற்றம், எழுதுவதில், கையெழுத் திடுவதில் தடுமாற்றம்.
* நினைவாற்றலில், சிந்தனையில், அன்றாட வேலைகளில் திறன் குறைவு, செயற்கையான கற்பனைகள் அதிகரிப்பு.
* மலச்சிக்கல், உணவை விழுங்குவதில், சிறுநீர் கழிப்பதில் சிரமம்.
* தொடக்க நிலை அறிகுறிகள் உடலின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.
உடலின் ஒரு பக்கம் மட்டுமே நடுக்கம் இருக்கும், கூடவே தோள் மூட்டு (அ) இடுப்பு மூட்டுப் பகுதியில் உள்ள தசைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு நடக்கும்போது சிரமம், தசைகளில் வலி, கைகளை தாராளமாய் வீசி நடக்க முடியாத தன்மை போன்றவை காணப்படும். திடீரென உட்காரவோ நடக்கவோ, இல்லை நடந்துகொண்டிருக்கும் போது திடீரென நிற்கவோ முடியாது. தினசரி அடிப்படைத் தேவைகளுக்கும் உதவியாளர்கள் தேவைப்படுவார்கள்.