அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
அடுத்த மாதம் 20ஆம் திகதி அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
தற்போது ஒவ்வொரு துறைகளுக்கும் அதிகாரிகளையும், கேபினட் மந்திரிகளையும் நியமித்து வருகிறார்.
அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவது என்பதில் உறுதி பூண்டுள்ளார்.
இதனால் வர்த்தகம் தொடர்பான வரிவிதிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் அமெரிக்கா உடனான மிகப்பெரிய வர்த்தக இடைவெளியை குறைக்கவில்லை எனில், மிகப்பெரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவிடம் இருந்து கியாஸ், கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
கடந்த முறை அதிபராக தேர்வானபோது, நீண்ட காலமாக ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவின் முதுகில் பயணம் செய்கிறது. நாங்களும் அதை அனுமதித்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த முறை நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா வழங்கும் அனைத்து கூடுதல் நிதிகளையும் நிறுத்துவிடுவோம், ஐரோப்பிய யூனியன் மிகப்பெரிய அளவில் பங்களிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
2022 அமெரிக்காவின் தரவுகளின்படி, ஐரோப்பிய யூனியன் உடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 202.5 பில்லியனாக இருந்துள்ளது.
அமெரிக்கா ஐரோப்பிய யூனியனில் இருந்து 553.3 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
அதேவேளையில் ஐரோப்பிய யூனியன் 350.8 பில்லியன் அளவிற்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
இந்த வர்த்தக ஏற்றத்தாழ்வை விரைவாக சரிசெய்ய டிரம்ப் விரும்புகிறார்.
அவரது அச்சுறுத்தும் அணுகுமுறை அதைச் செய்வதற்கான சிறந்த வழியாக இல்லாவிட்டாலும், அது “அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க” உதவும் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.
அகராதியில் அவருக்கு மிகவும் பிடித்த வார்த்தை வரிகள் என்று அவர் கூறுகிறார்.
தென் அமெரிக்காவின் நான்கு முக்கிய நாடுகளான பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகியவற்றுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், ஐரோப்பா ஏற்கனவே அமெரிக்காவை தாண்டி தங்களது விருப்பங்களை தேடத் தொடங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும்.