பழமைவாதியான டொனல்டு டிரம்ப் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
அடுத்த மாதம் இரண்டாவது முறையாக அதிபர் பதவி ஏற்கும் டிரம்ப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
கடந்த 2016 முதல் 2020 வரையிலான டிரம்ப்பின் ஆட்சி காலத்தில் மக்கள் கடும் கட்டுப்பாடுகளை சந்தித்த நிலையில் இனி வரும் 4 வருடமும் அப்படியே அமையும் என்பதை அவரது முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
அந்த வகையில் நேற்று அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த இளம் பழமைவாதிகளுக்கான குடியரசுக் கட்சி மாநாட்டில் பேசிய டொனால்டு டிரம்ப், அதிபர் பதவி ஏற்கும் நாள் முதல் திருநங்கைகள் என்ற பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் பாலியல் சிதைவை நிறுத்தவும், திருநங்கைகளை ராணுவத்திலிருந்து வெளியேற்றவும், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து அவர்களை வெளியேற்றும் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆண்களை பெண்கள் விளையாட்டுகளில் இருந்து விலக்கி வைப்பதாக அவர் சபதம் செய்தார்.
ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும் என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மூன்றாம் பாலினத்தவரான LGBTQ சமூகத்தினரின் உரிமைகளுக்கு எதிராக அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.
LGBTQ பிரச்சினைகள் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க அரசியலை பெரிதும் தாக்கம் செலுத்த வருவது குறிப்பிடத்தக்கது.