தேவையற்ற வகையில் உப்பைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் நந்தன திலக பொதுமக்களைக் கோரியுள்ளார்.
நேற்றைய தினம் பொறுப்புகளை ஏற்றதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்திடம் 6,000 மெற்றிக் டன் உப்பு கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த உப்பு கையிருப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பண்டிகை காலத்தில் சந்தையில் முட்டையின் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேநேரம், தேங்காயின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அரிசி பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.
சந்தைகளில் தொடர்ந்தும் பச்சை அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
சில வர்த்தக நிலையங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குப் பச்சை அரிசி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.