பணிப்பெண்ணாக வெளிநாடு சென்ற நிலையில், உயிரிழந்த தனது இளைய மகளனி உடலை கொண்டுவரவும், உயிருக்கு போராடும் மூத்த மகளையும் நாட்டிற்கு அழைத்துவரவும் அவர்களின் பெற்றோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் சுசி கிராமத்தை சேர்ந்த பெற்றோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களின் இரு மகள்கள் வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற நிலையில் அவர்களில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலையீட்டினால் இவர்கள் இருவரும் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதில் 22 வயதான யுவதி ஓமானில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்த யுவதியின் 24 வயதான மூத்த சகோதரி துபாயில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பணிப்புரியும் இந்த இரண்டு யுவதிகளும் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாகவும், ஊதியம் வழங்காம் தனித் தனி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு யுவதிகளும் இலங்கையில் உள்ள தங்கள் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி, தங்களை மீட்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்ய அவர்களது பெற்றோர் சென்றிருந்த போதிலும், முறைப்பாட்டை ஏற்க பணியகம் மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
மகள்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு சுமார் எட்டு லட்சம் வரை செலவாகும் என பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தனர்.
இபெற்றோர்கள் வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு செய்ய வந்த போது சமுர்த்தி உத்தியோகத்தர் வீட்டிற்கு வந்து ஏன் இவ்வாறு முறைப்பாடு செய்தீர்கள் என வினவியதுடன் அவர்களை அச்சுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹம்பாந்தோட்டை நிர்வாக வளாகத்தில் கடமையாற்றும் நபர் எனவும், சில காலமாக துபாய், ஓமன், போன்ற நாடுகளுக்கு மனித கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வெளிவிவகார அமைச்சில் முறைப்பாடு செய்ததன் பேரில், தனது மகள் கொல்லப்பட்டிருக்கலாம் என, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், 24 வயதான மூத்த மகள் தன்னை விரைந்து மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக யுவதியின் தாய் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை சுசி கிராமத்தில் தகரங்களால் ஆன சிறிய வீட்டில் குடும்பம் வாழ்ந்து வருவதாகவும், உயிரிழந்த மகளின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை என பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
பத்து குழந்தைகளைக் கொண்ட இந்தக் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதும், அவர்கள் தகரக் கொட்டகையில் வசித்து வருவதும் தெரியவந்தது.
குறித்த குடும்பத்தின் தந்தை தற்போது சுகவீனமடைந்துள்ளதாகவும், குறித்த யுவதிகள் இருவரும் வீடு கட்டும் நம்பிக்கையிலும் தந்தைக்கு சிகிச்சை அளிக்கும் நம்பிக்கையிலும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றதாகவும், ஆனால் பொலிஸார் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.