திங்கள் கிழமை வந்துவிட்டாலே பலருக்கும் பதற்றமாகிவிடுகிறது. சொல்லப்போனால் திங்கள் வருகிறதே என்ற கவலை சிலருக்கு ஞாயிறு மாலையே உருவாகிவிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் மண்டே மார்னிங் புளூ (Monday Morning Blue) என்கிறார்கள். இதனை வெல்வது எப்படி?
1. சீக்கிரமாக உறங்குங்கள்
ஞாயிற்றுக்கிழமை சீக்கிரமாக படுக்கைக்குச் செல்வது அவசியம். இதனால், நல்ல உறக்கம் கிடைக்கும். உடலில் உற்சாகம் பிறக்கும். மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
2. அதிக வேலைப் பளுவைத் தவிர்த்திடுங்கள்
திங்கள் கிழமைகள் மனச்சோர்வை அளிப்பவையாக இருந்தால், எல்லா வேலையையும் அன்றே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஞாயிறு மதியம், செவ்வாய் காலை என திட்டமிட்டு வேலையை முன்பே பிரித்து வைத்துவிடுங்கள்.
3. உடற்பயிற்சி அவசியம்!
ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல், ஜாகிங் போன்ற கார்டியோ பயிற்சிகள், யோகா போன்றவை உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
4. பொழுதுபோக்கு தேவை
உங்களுக்கு என ஏதேனும் ஒரு ஆரோக்கியமான பொழுது போக்கை வைத்திருங்கள். புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது, இசைக் கருவிகள் இசைப்பது போன்றவை உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுபடச் செய்யும்.
5. பணியை நேசியுங்கள்
உங்கள் வேலையை நேசியுங்கள். உங்கள் பணியின் இயல்பை புரிந்துகொள்ளுங்கள். எப்போதும் மகிழ்ச்சி என்பது நமது தேர்வுதான். அது நமக்கு இன்னொருவர் தருவதல்ல. மனதைக் கரைத்து பணியாற்றும்போது உங்களுக்கு சுமை தெரியாது. செய்யும் பணியில் நிறைவை உணரவில்லை என்றால் உங்களுக்கான பணியைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.