இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஐக்கிய அமெரிக்கப் பேரவைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை வழங்குவதற்கான இந்த திட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் அனுமதி தேவைப்படுகிறது.
ஜனாதிபதி ஜோ பைடன் பதவி விலகுவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காசாவில் போரின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை காரணமாக, இஸ்ரேலுக்கான இராணுவ ஆதரவை நிறுத்துமாறு பல நாடுகள் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
முன்னதாக கடந்த ஓகஸ்ட் மாதம், இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டொலர் பெறுமதியான போர் விமானங்கள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா இணங்கியது.
இந்தநிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதியன்று வெள்ளை மாளிகையை விட்டு ஜனாதிபதி ஜோ பைடன் வெளியேறுவதற்கு முன்னதாக, இஸ்ரேலுக்கு அமெரிக்காவினால் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள கடைசி ஆயுத தொகுதியாகவும் இது இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.