ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்தும் வெளியேற்றப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1 – 3 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய ஜஸ்பிரித் பும்ரா, “காயத்தால் விளையாட முடியாதது விரக்தியை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் உடலுடன் மல்லுக்கட்டாமல் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த தொடரில் பந்துவீச அதிக சாதகமான பிட்ச்-இல் பந்துவீச முடியாமல் போனது ஏமாற்றம். முதல் இன்னிங்ஸில் விளையாடும் போதே, கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்தேன். இதனால் தான் அந்த முடிவை எடுத்தேன்.
அப்போது மற்ற பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பேசிக் கொண்டோம். ஒரு பந்துவீச்சாளர் குறைந்த நிலையில், மற்றவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. இன்று காலை வெற்றிக்கு தேவையான போராட்ட குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினோம்.
இந்த தொடர் துவங்கியதில் இருந்தே நாங்கள் கடினமான போட்டியை வெளிப்படுத்தினோம். இதனால் இன்று நாங்கள் ஒருதலைபட்சமாக தோற்றோம் என்று அர்த்தமல்ல. டெஸ்ட் போட்டிகள் அப்படித்தான் செல்லும். நீண்ட நேரம் களத்தில் நின்று சூழ்நிலைக்கு ஏற்றவாரு விளையாடுவது முக்கியம். இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு வருங்காலத்தில் உதவும்.
தங்கள் பலத்தை அடிப்படையாக வைத்து விளையாடிய இளம் வீரர்கள் நல்ல அனுபவம் பெற்றனர். தொடரை வெல்ல முடியாததால் அவர்கள் ஏமாற்றத்தை சந்தித்திருப்பார்கள். ஆனால் இந்த அனுபவத்தில் இருந்து அவர்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொள்வார்கள். இது சிறந்த தொடராக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். அவர்கள் கடினமாக போராடினார்கள்,” என்று கூறினார்.