Thursday, January 9, 2025
HomeMain Newsயூத மதஸ்தலங்களை அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை – பிரதமர் ஹரிணி

யூத மதஸ்தலங்களை அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை – பிரதமர் ஹரிணி

இலங்கையில் யூத மதஸ்தலங்களை அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை.  என்றாலும், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அத்துடன், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தடைகள் விதிக்க முடியாது என்றும் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தால் சர்வதேச ரீதியில் வேறு பிரச்சினைகளுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி எம்.பி முஜிபுர் ரஹமான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பதில் அளிக்கையில்,

”யூத மதஸ்தலங்கள் அனுமதியின் கீழ் செயல்படும் மதஸ்தலங்கள் அல்ல. இவை தொடர்பிலான தீர்மானங்கள் மிகவும் விரைவாக எடுக்கப்படும். எமது நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. இன ரீதியாக அவர்களை பிரிக்க முடியாது.

நாட்டில் ஒரு சுற்றுலாப் பயணிக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் அதன் ஊடாக சர்வதேச ரீதியில் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். அதனால் நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

இந்த மத்திய நிலையங்கள் எவ்வித அனுமதியுடனும் செயல்படுபவை அல்ல. இது தொடர்பிலான தலையீட்டை நாம் விரைவாக மேற்கொள்வோம். அறுகம்பே தொடர்பான புலனாய்வு தகவலுடன்,பாதுகாப்பை வழங்க வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது. அது எமது நாட்டுக்குவரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு மாத்திரமே. எவருக்கும் அநாவசியமான விடயங்களை செய்வதற்கான பாதுகாப்பு அல்ல.

சர்வதேச கொள்கைகளை பின்பற்றும் நாடு என்ற அடிப்படையில் சர்வதேச சட்டங்களுக்கும் நாம் அனைவரும் உடன்பட வேண்டும். ஒரு இனத்தை மாத்திரம் நாம் இதில் அணுகினால் யாரை அனுமதிப்பது என்ற பிரச்சினை எழும். சுற்றுலாத்துறை எமது நாட்டின் பாரிய வருமானம் ஈட்டும் துறையாகும்.  அதனால் எந்தவொரு நாட்டின் சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதியை மறுக்க முடியாது. எதிர்காலத்தில் இதுதொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம். வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் இராணுவ வீரர்களா என்பது தொடர்பில் குடிவரவு – குடியகழ்வு திணைக்களத்தால் தகவல்களை திரட்ட முடியாதுள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments