லொஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தவிர 12,000 கட்டடங்கள் முற்றாக அழிவடைந்து அல்லது சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈற்றன் (Eaton) மற்றும் பலிசேட்ஸ் (Palisades) பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காட்டு தீப்பரவல் மேலும் விரிவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த பிரதேசங்களில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.
பலிசேட்ஸ் காட்டுத் தீ, இதுவரை 22,600 ஏக்கர் பயிர்ச் செய்கைகளை அழித்துள்ளதுடன், 14,000 ஏக்கர் பயிர்ச் செய்கை காணிகள் ஈற்றன் பகுதியில் அழிந்து போயுள்ளன.
இந்த பிரதேசங்களில், பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் தீயணைக்கும் படையினர் 11 முதல் 15 சதவீதமான தீயினை இன்று காலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
இதனிடையே, குறித்த பகுதியில் இன்றிரவு முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை காற்றின் வேகமானது 120 கிலோமீட்டராக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாக இருக்கும் என ‘ரைம்ஸ்’ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த அழிவு காட்சிகள் போர்க்களம் போல இருப்பதாக விபரித்துள்ளார்.
இதனிடையே, மக்கள் வெளியேறிய பிரதேசங்கள் அனைத்திலும் கொள்ளையினை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொள்ளையில் ஈடுபட்ட சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகரித்து வரும் பொதுமக்களின் விரக்திக்கு மத்தியில், கலிபோர்னியாவின் ஆளுநர், மாநிலத்தின் தயார் நிலை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து சுயாதீனமாக மறு ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆரம்பக்கட்ட தீயணைப்பு முயற்சிகளின் போது, ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறை குறித்து பொதுமக்கள் சீற்றம் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களைக் கண்டறியும் நோக்கில், பயிற்றப்பட்ட நாய்களுடன் கூடிய மீட்புக் குழுக்கள் இடிபாடுகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் மீட்பு மற்றும் தீயணைப்புப் பணிகளில் கனடா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன.
மொத்தமாக 14,000 தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாகக் களத்தில் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.