பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பணப்பெட்டியை எடுக்க ஓடிய போட்டியாளர் ஒருவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் உள்ளே வராததால் பாதியில் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை உடன் முடிவடைய உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜெக்குலின், முத்துக்குமரன், விஷால், பவித்ரா, செளந்தர்யா, ரயான் ஆகிய ஆறு பேர் பைனலுக்கு தேர்வாகி இருந்தனர். இவர்களில் ஒருவருக்கு தான் பிக் பாஸ் டைட்டில் கிடைக்க உள்ளது. இந்த வாரம் முழுக்க பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியதால், பிக் பாஸ் வீட்டுக்குள் எலிமினேட் ஆன போட்டியாளர்களும் ரீ-எண்ட்ரி கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி ஒவ்வொரு சீசனிலும் வைக்கப்படும். அந்த பணப்பெட்டியை எடுக்கும் போட்டியாளர் அத்துடன் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவார்கள். இதுவரை நடந்து முடிந்த 7 சீசன்களிலும் அதிகபட்சமாக 16 லட்சம் பணப்பெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற பூர்ணிமா 16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார். அதனால் இந்த சீசனில் அந்த பணப்பெட்டியை யார் எடுக்கப்போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
ஆனால் இம்முறை பணப்பெட்டியை எடுப்பதில் பயங்கர ட்விஸ்ட் ஒன்றை வைத்தார் பிக் பாஸ். வழக்கமாக பணப்பெட்டி வைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் அதன் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும். ஆனால் இம்முறை பணப்பெட்டியை எடுக்க முதன்முறையாக டாஸ்க் வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே குறிப்பிட்ட தொலைவில் பணப்பெட்டி வைக்கப்படும். அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த பெட்டியை எடுத்து வருபவர்களுக்கு அந்த பணம் சொந்தமாகும். ஒரு வேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் உள்ளே வராவிட்டால், அந்த போட்டியாளர் அப்படியே வெளியேற்றப்படுவார்.
அந்த வகையில் முதலில் 50 ஆயிரத்திற்கான பணப்பெட்டி வைக்கப்பட்டது. அதை முத்துக்குமரன் வெற்றிகரமாக எடுத்துக்கொண்டு உள்ளே வந்தார். பின்னர் 2 லட்சத்திற்கான பணப்பெட்டியை ரயான் எடுக்க சென்றார். அவருக்கு 25 விநாடிகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் 17 விநாடிகளிலேயே அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டுவந்து 2 லட்சத்தை தன் வசப்படுத்தினார். இந்த டாஸ்கில் போகப் போகப் பணத்தின் மதிப்பு அதிகரிக்கப்பட்டு வந்தது.
அப்படி நேற்று 8 லட்சத்திற்கான பணப்பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பணப்பெட்டியை எடுத்து வர 35 விநாடிகள் கொடுக்கப்பட்டது. அதை எடுக்க ஜெக்குலின் சென்றிருக்கிறார். அவர் பணப்பெட்டியை எடுத்து வர 37 விநாடிகள் எடுத்துக் கொண்டதால் அவர் உள்ளே வருவதற்குள் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் ஜெக்குலின் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். டைட்டில் ஜெயிக்கும் கனவோடு இருந்த ஜெக்குலின் பணப்பெட்டி டாஸ்கில் எலிமினேட் ஆகி இருப்பது சக பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.