இங்கிலாந்திலிருந்தபடி இந்தியாவில் வாழும் தனது முன்னாள் மனைவியையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய முயன்ற இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் Berkshireஇலுள்ள Maidenhead என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த அஜித் குமார் முப்பரப்பு என்னும் இந்தியர், பயங்கர கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அஜித் குமாருக்கும் Dr சிரிஷா (Dr Sirisha Muttavarapu) என்னும் பெண்ணுக்கும், இந்தியாவின் ஹைதராபாதில் வைத்து திருமணம் ஆகியுள்ளது.
இருவருமே ஏற்கனவே திருமணமாகி தத்தம் துணைவர்களைப் பிரிந்தவர்கள்.
இருவரும் பிரித்தானியா சென்றபிறகு, அஜித் குமார் சிரிஷாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதால், சிரிஷா 2022ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பிக்க நேர்ந்துள்ளது.
இந்தியா சென்றுவிட்ட மனைவியையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார் அஜித் குமார்.
2023ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் சிரிஷாவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய முயன்ற ஆறு பேர் கைது செய்யப்பட, அதைத் தொடர்ந்து அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிரவைக்கும் தகவல்கள்
ஆம், 2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் ஆகத்து மாதம் வரை சிரிஷாவையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்ய கூலியாட்களை ஏற்பாடு செய்துள்ளார் அஜித் குமார்.
2023ஆம் ஆண்டு, மார்ச் மாதம் சிரிஷாவின் வீட்டுக்கு உணவு டெலிவரி செய்யும் ஆட்கள் மூலம் விஷம் கலந்த மசாலா பொருட்களை அனுப்பியுள்ளார் அஜித் குமார்.
அதை உட்கொண்ட சிரிஷாவின் சகோதரரான புரேந்தரின் மாமியாரான உமா மகேஷ்வரி (60) உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்.
ஆனால், சிரிஷா, புரேந்தர், அவரது மனைவியான சசிரேகா, அவரது தந்தையான ஹனுமந்த ராவ் ஆகியோர் உயிர் பிழைத்துக்கொண்டார்கள்.
அவர்களுடைய உடலில் பெருமளவில் அந்த விஷம் இருந்தது மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்தது.
பின்னர், ஹனுமந்த ராவின் கழுத்தில் ஊசி மூலம் விஷத்தை செலுத்த ஆட்களை ஏற்பாடு செய்துள்ளார் அஜித் குமார்.
இம்மாதம் 17ஆம் திகதி அஜித் குமார் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடுகடத்தும் முயற்சிகள் துவங்கியுள்ளன.
ஜாமீனுக்கு விண்ணப்பித்த அஜித் குமாரின் விண்ணப்பம், அவர் தலைமறைவாகவும், மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புள்ளதால், நிராகரிக்கப்பட்டுள்ளது.
தன்னை நாடுகடத்த தனக்கு சம்மதமில்லை என அஜித் குமார் லண்டனிலுள்ள நீதிமன்றம் ஒன்றில் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் அடுத்த மாதம் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார் அவர்.