வாஷிங்டன் டிசி பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று, உலங்கு வானூர்தி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இத்தகவலை அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 60 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்ததாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
நேற்று (29) இரவு 9 மணியளவில் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் 33ஆவது ஓடுதளத்தை நோக்கிக் குறித்த விமானம் வந்து கொண்டிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வர்ஜீனியாவின் ஃபோர்ட் பெல்வோயரில் இருந்து வந்த இராணுவ உலங்கு வானூர்தி (UH-60) ஒன்றுடனே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் (5342) மோதியுள்ளது.
விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.