அமெரிக்க பயணிகள் விமானம் ஒன்று உலங்கு வானூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவற்றில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்திலிருந்து 64 பேருடன் பயணித்த குறித்த விமானம் அந்த நாட்டு இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து குறித்த விமானம் மற்றும் உலங்கு வானூர்தி ஆகியன பொட்டோமெக் ஆற்றில் வீழ்ந்துள்ளன.
இந்த சம்பவம் நேற்று காலை அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமானம் தரையிரங்குவதற்கு தயாரான நிலையில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் பயணித்ததுடன் உலங்கு வானூர்தியில் 3 இராணுவ உத்தியோகத்தர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், விபத்துக்குள்ளான விமானம் மற்றும் உலங்கு வானூர்தியில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த விமானம் மற்றும் உலங்கு வானூர்தி ஆகியன வழமையான விமான விதிமுறைகளைப் பின்பற்றி வந்ததாகவும், தகவல் தொடர்புகளில் எந்தக் கோளாறும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் 30 நாட்களுக்குள் முதற்கட்ட அறிக்கையை வெளியிடுவதாகவும் தரவுகளை பதிவு செய்யும் கருப்புப் பெட்டிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையின் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்