Saturday, May 24, 2025
HomeMain NewsSri Lankaஇலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று..!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று..!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82ஆவது வயதில் கடந்த புதன் கிழமை இரவு காலமானார்.

தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் அவர் காலமானார்.

இந்தநிலையில், மாவிட்டபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு நேற்றைய தினம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, இன்று காலை மாவிட்டபுரத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று, அதன் பின்னராக இரங்கல் உரையைத் தொடர்ந்து, தச்சங்காடு இந்து மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய பட்டியல் ஊடாக மாவை சேனாதிராஜா முதன்முறையாக நாடாளுமன்றுக்கு தெரிவானார்.

பின்னர் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.

அதற்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவப்பட்டதுடன், இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 2004, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் அவர் நாடாளுமன்றுக்கு தெரிவானார்.

அதேநேரம், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments