பௌர்ணமி தினமான இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த நிலையில் உள்ளன.
இதன்காரணமாக நாளை முதல் மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்தப்படுமா என்பது குறித்த தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டது.
பாணந்துறை உப மின்நிலையத்தில் குரங்கொன்று மோதியதே இதற்குக் காரணம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடையுடன், பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதன் காரணமாக நுரைச்சோலையில் உள்ள லக்விஜய அனல் மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகளும் செயலிழந்தன.
இதனால் தேசிய மின் கட்டமைப்புக்கு 900 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டது.
இதன் விளைவாக, இரண்டாயிரத்து 600 மெகாவாட் என்ற நாளாந்த அதிகபட்ச மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு மின்சார சபைக்கு மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதென வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
அதன்படி, நேற்றும் நேற்று முன்தினமும் பிற்பகல் 3.30 முதல் இரவு 10 மணி வரை நான்கு வலயங்களின் கீழ் மின் தடையை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியது.
இதனிடையே இன்றைய தினம் பௌர்ணி தினம் என்பதால், மின்சார கேள்வி சிறிதளவு குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.