மகா கும்பமேளா விழா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வருகிறது. 45 நாள் திருவிழாவான இந்த கும்பமேளா வருகிற 26-ந்தேதி சிவராத்தியுடன் முடிவடைகிறது.
கும்பமேளா தொடங்கியதில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் புனித நீராடி வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக உ.பி. அரசு தெரிவித்திருந்தது.
இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிரயாக்ராஜ் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் பிரயாக்ராஜ் நகருக்கு வர முடியாமல் பல கி.மீ. தொலைவிற்கு அப்பால் மக்கள் வாகனங்களில் தவித்து வருகின்றனர்.
மேலும் பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் ஏறுவதற்காக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பீகாரில் உள்ள ரெயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் செல்லும் ரெயிலில் கூட்டம் அலைமோதியதால் இடம் கிடைக்காதவர்கள் ஆத்திரத்தில் ஏ.சி. பெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
சனிக்கிழமை இரவு டெல்லியில் பிரயாக்ராஜ் செல்லும் சிறப்பு ரெயிலுக்காக பக்தர்கள் காத்திருந்த நேரத்தில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிழக்க மத்திய ரெயில்வே (ECR) பீகார் மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாத பயணிகள் ரெயில் நிலையத்திற்கு நுழைய தடைவிதித்துள்ளது.
கிழக்கு மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு தலைமை அதிகாரி சரஸ்வதி சந்த்ரா இது தொடர்பாக கூறுகையில் ” கிழக்கு மத்திய ரெயில்வேயின் அதிகார வரம்பிற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகா கும்பமேளாவிற்கு மக்கள் சுமூகமாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய ரெயில்வே உறுதிப்பூண்டுள்ளது. பீனார் மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் நுலைவு வாயில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாமல் நுழைய தடைவிதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், டிக்கெட் இல்லாத பயணிகளை தடை செய்ய உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காவல்துறையின் உதவியை ரெயில்வே கேட்டுள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடீரென கூடும் கூட்டத்தை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் ஊழியர்கள் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
பாட்னா, தனாபூர், ஆரா, கயா, சாசராம், முசாபர்பூர், சிதாமர்ஹி, தர்பங்கா உள்ளிட்ட பீகார் மாநிலங்களில் உள்ள ரெயில் நிலையங்களக்கு இதுவரை இல்லாத அளவிற்கு பிரயாக்ராஜ் செல்ல பயணிகள் வருகை தருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.