வேதனம் முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
சுகாதார அமைச்சருடனான இந்த சந்திப்பில், வைத்தியர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளைச் சரிசெய்து நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்தார்.
இதற்கான பணிகளை முன்னெடுப்பதற்குக் கால அவகாசம் வழங்கிப் பணிப்புறக்கணிப்பு தீர்மானத்தைக் கைவிடுமாறு அமைச்சர் கோரியிருந்தார்.
அதற்கமைய, வைத்தியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைமையொன்றை பாதீடு தொடர்பான இறுதி வாக்கெடுப்புக்கு முன்னதாக முன்வைப்பதாகச் சுகாதார அமைச்சர் உறுதியளித்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
எனவே, இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை பாதீடு தொடர்பான இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள எதிர்வரும் 21 ஆம் திகதிவரை ஒத்திவைப்பதற்கு தங்களது சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
இதேவேளை, தங்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளைய தினம், காலை 10 மணி முதல் 3 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய, குறித்த காலப்பகுதியினுள் சகல வைத்தியசாலைகளுக்கும் முன்பாக தங்களது சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தார்.
வைத்தியர்களுடனான கலந்துரையாடலிலும் கூட அவர்கள் கோரிய கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக அறியமுடிகிறது.
எனவே, தங்களுக்கு நியாயமான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, நாளைய தினம் 3 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய, தெரிவித்துள்ளார்.