1976 ஆம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா.
இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
இவர் கடந்த மார்ச் 8ஆம் திகதி லண்டனில் ‘வேலியண்ட்’ (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார்.
இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார்.
இந்தியாவிற்கே பெருமை பெற்றுத்தந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.
இதற்கிடையில்,இளையராஜாவிற்குத் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த பதிவில் ‘பிரதமர் மோடியுடனான சந்திப்பு, எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது.
எனது சிம்பொனி வேலியண்ட் உட்பட பல விடயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம்.
அவரது பாராட்டு மற்றும் ஆதரவால் பணிவு கொள்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடம் தனது எக்ஸ் தளத்தில் இளையராஜாவுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில்’இளையராஜா அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது.
இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது – உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது ‘ என்று பதிவிட்டுள்ளார்.